தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி முதல் நடத்தி வந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடி உள்ளார்.
ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக ‘ஜெனரேஷன் இசட்’ (Gen Z) இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இளைஞர்களின் போராட்டத்திற்கு இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால், இராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஜனாதிபதி ரஜோலினா குற்றம் சாட்டினார்.
“என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது” என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார். அவர் பதவி விலகுவதாக அறிவிக்கவில்லை என்றாலும், நாட்டை விட்டு அவர் வெளியேறியதால், அவரைப் பதவியில் இருந்து விலக்க அந்த நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனை அடுத்து, மடகஸ்காரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவ கேர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
