Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இந்தியாவில் இலங்கை பொலிஸ் அதிகாரிக்கு விடுதலை!

சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டாரேவை, அவர் ஏற்கனவே அனுபவித்த சிறைத் தண்டனையைக் கருத்தில் கொண்டு, ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் நேற்று (செப். 24) விடுதலை செய்து உத்தரவிட்டது.

இலங்கை கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரேவின் சகோதரர், 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருந்தார். கைது செய்யப்பட்ட சகோதரர், அந்தப் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டாரேதான் தன்னிடமளித்ததாகக் கூறியதையடுத்து, அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் முறையான ஆவணங்கள் இன்றி படகு மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கியுள்ளார்.

சட்டவிரோதப் பிரவேசம் காரணமாக மண்டபம் மரைன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரதீப்குமார் பண்டாரே, சென்னை புழல் சிறையிலும், பின்னர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமிலும் என 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஏற்றுக்கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கோரினார். இதனையடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையான 2 ஆண்டுகளை விட அவர் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்ததாலும், அபராதத் தொகையையும் செலுத்தியதாலும், அவரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர் சட்ட நடைமுறைகளை முடித்துக்கொண்டு தனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்லலாம் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார். நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் அந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலையாகி நாடு திரும்பவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை