தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை, கோபாலசமுத்திரம் பகுதியில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், 3 குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வினோத்குமார் என்ற தந்தை, இந்தக் கொடூரத்தைச் செய்துவிட்டு மதுக்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நடந்தது என்ன?
பெரியகோட்டையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும், டிரைவருமான வினோத்குமார் (38), அவரது மனைவி நித்யா (35) ஆகியோருக்கு ஓவியா (12, 6-ம் வகுப்பு), கீர்த்தி (8, 3-ம் வகுப்பு), ஈஸ்வரன் (5) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், நித்யாவுக்குத் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து நித்யா கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்றுவிட்டார்.
கொடூரத்திற்கு வழி வகுத்த ஏமாற்றம்
மனைவியைப் பிரிய முடியாத நிலையில் இருந்த வினோத்குமார், சில நாட்களுக்கு முன்பு மனைவியை நேரில் சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், நித்யா கணவருடன் வர மறுத்து, கள்ளக்காதலனுடனேயே இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால், மனைவி பிரிந்து சென்ற வேதனை ஒருபுறம், 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறுபுறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நெஞ்சை உலுக்கும் கொலை
மனம் நொந்த வினோத்குமார் நேற்று மாலை, குழந்தைகளுக்குப் பலகாரங்கள் வாங்கி வந்து கொடுத்துள்ளார். குழந்தைகள் அதை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வினோத்குமார் தனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, தான் பெற்ற 3 குழந்தைகளையும் துடிக்கத் துடிக்கச் சரமாரியாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
கொலையைச் செய்தபின் வினோத்குமார், மதுக்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று தானே சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
