உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கோபால் நர்சிங் ஹோம் (Gopal Nursing Home) எனும் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட அலட்சியமான சிகிச்சையின் காரணமாக, அக்டோபர் 5ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தையின் கையைத் துண்டிக்க வேண்டிய சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு ஊசி செலுத்தப்பட்ட சில நேரங்களிலேயே குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து பெற்றோருக்கு எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்காமல், குழந்தையின் கைக்குக் கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அவசரமாக பரிந்துரைத்தது.
கையைத் துண்டிக்க வேண்டிய அவல நிலை
அலட்சியமான சிகிச்சையின் விளைவாக, தற்போது குழந்தையின் கை அழுகும் (Gangrene) நிலையில் மாறி, அதைத் துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் கோபால் நர்சிங் ஹோம் நிர்வாகத்துக்கு எதிராக கடுமையான புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
