லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தை அடுத்து, லே நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பின்னர், ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது முதல், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசாரின் வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லேவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தபோதும், இந்தச் சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கக் காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
