Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

கிரிக்கெட்டின் 4-வது வடிவம் வந்துவிட்டது!

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்குள் புதிய ஆவலை ஏற்படுத்தும் வகையில், ‘டெஸ்ட் ட்வென்டி’ (Test Twenty) எனும் புதிய போட்டி வடிவம் அறிமுகமாகியுள்ளது.

கிரிக்கெட்டின் மரபுகள் மற்றும் மாறிவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த புதிய முயற்சி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குப் பிறகு, நான்காவது உத்தியோகபூர்வ வடிவமாக கருதப்படுகிறது.

இந்த புதுவித கிரிக்கெட்டை உருவாக்கியவர் கவுரவ் பஹிர்வானி. இளம் தலைமுறையைக் குறிப்பாக 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கிரிக்கெட்டிற்கு ஈர்க்கும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கிரிக்கெட் விளையாடப்படாத நாடுகளிலும், விளையாட்டை பரப்புவதற்காகவும் இது ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

‘டெஸ்ட் ட்வென்டி’யின் போட்டி வடிவமைப்பு, டெஸ்ட் போட்டியின் நுணுக்கங்கள் மற்றும் டி20 போட்டியின் வேகத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் இரண்டு இன்னிங்ஸ்களில் தலா 20 ஓவர்கள் விளையாடும் விதமாக, ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும்.

இதன் முடிவுகள் வெற்றி, தோல்வி, டிரா அல்லது சமன் என அமையலாம். இது, டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய சூழ்நிலையை இளம் ரசிகர்களுக்கு எளிமையாக அனுபவிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் சீசன், 2026ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் தொடங்க உள்ளது. தொடக்க கட்டமாக, முதல் இரண்டு பதிப்புகளும் இந்தியாவில் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் ஆறு அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன. இதில், இந்தியா மூன்று அணிகளை வழங்கவுள்ளது.

மற்ற அணிகள் துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்றாக அமையவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம்பெறுவர். அதில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும், 8 பேர் சர்வதேச வீரர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய போட்டி வடிவத்துக்கான ஆலோசனை குழுவில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சர் கிளைவ் லாய்ட், மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அனுபவமும் பார்வையும், இந்த முயற்சிக்கு நம்பிக்கையூட்டுகிறது.

தெளிவான நோக்கத்துடன், துல்லியமான திட்டத்துடன் அறிமுகமாகும் ‘டெஸ்ட் ட்வென்டி’ கிரிக்கெட் உலகில் ஒரு புதிய மாற்றத்தையும், இளம் ரசிகர்களுக்கான புதிய வாசலையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை