Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

நடிகரின் இழப்பு சொன்ன ஆரோக்கியப் பாடம்!

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரோபோ சங்கர், உடல்நலம் தேறி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் அளித்தும் பலனின்றி, அவரது கல்லீரல் செயலிழந்ததால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது. கல்லீரல் நோய்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கல்லீரல் கொழுப்பு நோய்

கல்லீரல் கொழுப்பு நோய், ஆல்கஹால் சார்ந்த மற்றும் ஆல்கஹால் அல்லாத என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

  • ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்: அதிகப்படியான மது அருந்துவதால் இது ஏற்படுகிறது. மது, உடலுக்குத் தேவையற்ற நச்சாக மாறுவதால், அதை வெளியேற்றக் கல்லீரல் போராடுகிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து வீக்கம் ஏற்படுகிறது.
  • ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்: மது அருந்தாதவர்களுக்கும் ஏற்படும் இந்நோய்க்கு, உடல் பருமன், இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. தொடக்கத்தில் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, மஞ்சள் காமாலை, வயிற்று வலி போன்றவை தோன்றலாம்.

கல்லீரல் வீக்கம் (ஹெபடைடிஸ்)

இது பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ போன்ற வைரஸ்கள் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் அல்லது அசுத்தமான பொருட்கள் மூலம் பரவலாம். அதிக மது அருந்துவது, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வது போன்றவையும் இந்நோயை ஏற்படுத்தலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்ற நாட்டு மருந்துகள் இதை குணப்படுத்தும் என நம்புவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

கல்லீரல் சிரோசிஸ்

இது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி நிரந்தரமாக சேதமடையும் ஒரு தீவிரமான நிலை. இந்நோய்க்கு எந்த நாட்டு மருந்தும் இல்லை. இது கல்லீரல் செயல்பாட்டை கடுமையாகப் பாதித்து, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வு.

கல்லீரல் செயலிழப்பு

கல்லீரல் நோயின் இறுதி மற்றும் மிகவும் ஆபத்தான நிலை இது. இந்நிலைக்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாகும். இத்தகைய அவசர நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, இரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை